சென்னை: தமிழ்நாடு முழுவதும் 35 ரயில்களுக்குக் கூடுதல் நிறுத்தங்கள் அளிக்க இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ‘இந்து தமிழ் திசை’ செய்தி தெரிவிக்கிறது.
பயணிகளின் தேவை அடிப்படையில் தெற்கு ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்களுக்கான நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும்.
கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்க பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
35 ரயில்களில் 29 விரைவு ரயில்கள் ஆகும். மற்ற ஆறும் பயணிகள் ரயில்கள் ஆகும். கூடுதல் நிறுத்தங்களை வழங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை - கோயம்புத்தூர் கோவை விரைவு ரயில், சென்னை-பெங்களூரு இரு அடுக்கு ரயில் ஆகிய ரயில்களுக்கு திருவள்ளூர் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படவுள்ளது.
அதேபோல், சென்னை - ஜோலார்பேட்டை விரைவு ரயில் இனி அம்பத்தூரில் நின்று செல்லும். அதேநேரம் சென்னை எழும்பூர் - சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் விரைவு ரயிலுக்கு அரக்கோணத்தில் நிறுத்தம் வழங்கப்படவுள்ளது.
மங்களூர்- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல், அகமதாபாத் - சென்னை சென்ட்ரல், புதுச்சேரி - காச்சிகுடா, செங்கல்பட்டு - காச்சிகுடா உள்ளிட்ட ரயில்களுக்கு பெரம்பூரில் நிறுத்தம் வழங்கப்படவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
நிறுத்தம் வழங்கப்படவுள்ள 29 விரைவு ரயில் சேவைகளில் மெயில், அதிவிரைவு, அந்த்யோதயா ஆகியவை அடங்கும்.
இதுதவிர, சென்னை-மும்பை, சென்னை-விஜயவாடா, பெங்களூரு - கன்னியாகுமரி போன்ற நீண்ட தூர மாநிலங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளும் அடங்கும்.
மேலும், மெட்ரோ ரயில் இணைப்பு உள்ள விம்கோ நகரில் சென்னை-விஜயவாடா பினாகினி விரைவு ரயில், விஜயவாடா ஜன சதாப்தி விரைவு ரயில், பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில் ஆகியவற்றுக்கு நிறுத்தம் வழங்குவதும் அடங்கும். சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை மூலமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிறுத்தங்கள் அமைக்கப்படுவது பயணிகள் முக்கிய ரயில் முனையங்களுக்குப் பயணிக்காமலேயே நீண்ட தூர ரயில்களில் எளிதாக பயணம் செய்ய உதவும்.
புதிய நிறுத்தங்கள் அமல்படுத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

