சென்னை: இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
டிசம்பர் 14ஆம் தேதி புகழேந்தி புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அதில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்திருந்த உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அக்கட்சியின் எந்தப் பிரிவுக்கும் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக்கூடாது என அவர் வலியுறுத்தி இருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், டிசம்பர் 4ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவில், மத்திய தேர்தல் ஆணையம் அடுத்த நான்கு வாரங்களில் சூர்யமூர்த்தி மனு குறித்து முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அதிமுக முன்னாள் கர்நாடக மாநிலப் பிரதிநிதி புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுக்களையும் பரிசீலிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் 24ஆம் தேதி காலை 11 மணி அளவில் புகழேந்தி தேர்தல் ஆணையத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


