‘யோசன மஞ்சி யோசன.... வண்டி மாடு சப்சாடு’ எனத் தமிழகத்தில் உள்ள கன்னடம் பேசும் நெசவுத் தொழில் மக்கள் ஒரு பழமொழி சொல்வார்கள்.
‘மரத்தை வெட்டி வீழ்த்தி, அதைத் துண்டுபோட்டு, மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு போய், இன்னொரு இடத்தில் சேர்ப்பதற்குப் பதில், வண்டி மாட்டை மரத்தடியில் நிறுத்தி, அப்படியே மரத்தை வெட்டி, வண்டியில் சாய்த்து எடுத்துக் கொண்டு போனால் வேலை மிச்சம்’ என ஒருவர் ஆலோசனை சொல்ல...
அதுவும் சரிதான் என அப்படியே செய்ய, மரத்தின் மொத்த பாரமும் வண்டியில் விழுந்ததால், வண்டியும் நொறுங்கியது, மாடுகளும் படுத்துக்கொண்டன.
இதைத்தான், ‘யோசனை என்னவோ நல்ல யோசனைதான், ஆனா வண்டிக்கும் மாட்டுக்கும்தான் சேதாரம்’ எனச் சொல்வார்கள்.
சில சமயங்களில் யோசனைகளும் ஆலோசனைகளும் இப்படித்தான் ஏடாகூடமாய் ஆகிவிடும்.
இருப்பினும், தேர்தலில் நம் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், நாம் ஆட்சிக்கு வர வேண்டும், இதற்காக அரசியல் ஆலோசகர்களை நியமித்துக்கொள்ள வேண்டும்’ எனத் தேர்தலுக்கு ஓர் ஆண்டு முன்பிருந்தே தலைவர்கள் ஆளாய்ப் பறக்கிறார்கள்.
கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா காலம் வரை தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் ஆலோசகர்களுக்கு இடமில்லாமல் இருந்தது.
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் இந்தக் காலகட்டத்தில் ‘அட்வைச’ர்கள் அத்தியாவசியமாகிவிட்டார்கள். புதிதினும் புதிதாக இந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் தவெக தலைவர் விஜய்.
தொடர்புடைய செய்திகள்
அண்ணாவிடம் இருந்த ஆர்.எம்.வீரப்பனை, “தம்பி, எம்ஜிஆர் திராவிடத்தின் சொத்து. எனவே, நீ எம்ஜிஆருக்கு உதவியாக இரு” என ஆர்.எம்.வீ.யை 1950களில் எம்ஜிஆரிடம் அனுப்பினார் பேரறிஞர்.
அன்று முதல் எம்ஜிஆர் இறக்கும் வரை தேர்தல் பிரசாரம், அரசியல் வியூகங்களை எம்ஜிஆருக்கு அமைத்துத் தந்தவர் ஆர்.எம்.வீ.
கலைஞர் சிறு வயதில் இருந்து எழுத்து, பேச்சு, சுற்றுப்பயணம், போராட்டம் என அனுபவப்பட்டதால் பெரும்பாலும் அவரே தேர்தல் வியூகங்களை வகுப்பார்.
தமிழகம் முழுவதையும் கவரும்படி ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத் திட்டங்களை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வகுத்துத் தந்தவர் (முன்னாள் அமைச்சர்) செங்கோட்டையன் ஆவார்.
2016 தேர்தலில் நமக்கு நாமே என்ற முழக்கத்துடன் தமிழகம் சுற்றினார் ஸ்டாலின். ஆயினும் ஆட்சி வசப்படவில்லை. அதனால், தன் மருமகன் சபரீசன் ஏற்பாட்டின்படி, பீகாரைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை தமக்கு அரசியல் ஆலோசகராக நியமித்தார்.
காரணம் எதுவோ, திமுக ஆட்சியைப் பிடித்தது, ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்.
பிரசாந்த் கிஷோரின் ‘ஐ பேக்’ அரசியல் ஆலோசனை நிறுவனத்தில், முக்கியப் பொறுப்பில் இருந்த சுனில் கனுகோலு, 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகராகச் செயல்பட்டார்.
சுனில் இம்முறை காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டதால், வேறு கட்சிகளுக்கு தேர்தல் அரசியல் ஆலோசகராகச் செயல்பட வாய்ப்பில்லை.
இந்த முறை பிரசாந்த் கிஷோரை தங்கள் பக்கம் இழுக்க, ஸ்டாலினும் இபிஎஸ்சும் முயற்சி மேற்கொண்டனர் என்றும் அது கைகூடவில்லை என்றும் கூறப்படுகிறது.
இம்முறை தொடக்கத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் பிரசாந்த். ஆனால், அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட சில வாக்குறுதிகளின்படி செயல்படவில்லை எனத் தகவல் வெளியானது.
அதனால்தான் அவர் தவெகவின் மதுரை மாநாட்டுக்கு வரவில்லை என்றும் அவருக்குப் பதில், தலைவர் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி என்றும் தகவல். ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்விற்கான ஆலோசகராகப் பணியாற்றியவர் ஜான்.
பிரசாந்த்தும் சுனிலும்கூட ஐநா சார்ந்த ஊட்டச்சத்துப் பிரிவில் பணியாற்றியவர்கள்தான்.
நம்மூரில், இலவசமாகக் கிடைப்பது அறிவுரை மட்டும்தான் என முன்பு சொல்வார்கள்.
இனி அப்படிச் சொல்லாதீர்கள்...
அரசியல்வாதிகளுக்கு ஆலோசகர்கள் தரும் ‘அறிவுரை’ சில நூறு கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தது.