கோவில் தரிசனத்தை முறைப்படுத்த ‘ஏஐ’ செயலி: தமிழக அரசு ஆலோசனை

கோவில் தரிசனத்தை முறைப்படுத்த ‘ஏஐ’ செயலி: தமிழக அரசு ஆலோசனை

2 mins read
d3bb541b-6c2e-4219-a461-59d41852f17c
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் ஏறக்குறைய 43,700 கோவில்கள் உள்ளன. - படம்: தினமலர்

சென்னை: தமிழக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார் எழுப்பப்பட்டு வருகிறது.

பல கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு கோவில் நிர்வாகமே குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உதவியோடு கோவில் தரிசனம், இதர சிறப்பு சேவைகளைப் பெற புதிய செயலியை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடமே, சாமி தரிரசனத்துக்கு ரூ.4 ஆயிரம் கேட்கப்பட்ட சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் ஏறக்குறைய 43,700 கோவில்கள் உள்ளன.

இக்கோவில்களில் சாமி தரிசனம், சிறப்பு சேவைகளைப் பெறுவதற்கான தகவல்களை உள்ளடக்கிய, ஒருங்கிணைக்கப்பட்ட கோவில்கள் மேலாண்மை திட்ட மென்பொருளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

ஆனால் அடிக்கடி இணையத்தள இணைப்பு முடங்குவது, கட்டணம் செலுத்தி ரசீது பெறுவதில் ஏற்படக்கூடிய தாமதம் ஆகியவற்றால் பக்தர்கள் பல்வேறு வகையிலும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

இதையடுத்து, ‘ஏஐ’ மூலம் புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ள இக்காலகட்டத்தில் ‘கூகல் பே’, மின்னிலக்க பரிவர்த்தனைகள் மூலம் கோவில் சேவைக்கான கட்டணங்களைச் செலுத்த அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதையடுத்து, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செயலியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என இந்து அறநிலையத்துறை கூறியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்