ராமநாதபுரம்: தமிழகத்தில் முதன்முறையாக ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு ‘ஏடிஎம்’ மூலம் நகைக் கடன் வழங்கும் திட்டம் அறிமுகமானது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ‘சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா’ வங்கிக் கிளையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளனர்.
இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன.
இக்கிளைகளில் வாடிக்கையாளர்கள் எளிதாக நகைக் கடன் பெறும் வகையில் ஏடிஎம் நகைக்கடன் முறையை அறிமுகம் செய்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருப்பது குறையும்.
இந்தியாவில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலம், வாரங்கல் கிளையில் இத்திட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் செயல்பாட்டுக்கு வந்தது.
அடுத்த கட்டமாக பரமக்குடி கிளையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வங்கியின் நிர்வாக இயக்குநர், செயல் அலுவலர் மாதவ் வெங்கடராவ் இத்திட்டத்துக்கான ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.
“இனி நகைக் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளரின் கைப்பேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை ஏடிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதியில் உட்செலுத்திய பின்னர், மற்றொரு பகுதியில் தங்க நகைகளை வைக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பின்னர், அந்த நகைக்களுக்கான மதிப்பு என்னவென்று வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படும்.
இதையடுத்து நகைக்குப் பதிலாக கடன் தொகையைப் பெற வாடிக்கையாளர்கள் விரும்பினால், அவ்வாறே செய்யலாம். கடன் தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.