13 ஆண்டுகளாக காணாமல்போன சிறுமியைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுப் படம்

13 ஆண்டுகளாக காணாமல்போன சிறுமியைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுப் படம்

2 mins read
8f19b8f9-3cfe-4ff9-9325-82b8f76de7e7
கவிதாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது எடுக்கப்பட்ட படம் (இடது), செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் (வலது). - படங்கள்: கவிதாவின் பெற்றோர், காவல்துறை

சென்னை: கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு வயதுச் சிறுமி சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவளது வீட்டிலிருந்து மாயமானாள்.

கவிதா எனும் அச்சிறுமி என்றைக்காவது ஒருநாள் வீடு திரும்புவாள் என அவளுடைய பெற்றோர் இன்றும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சென்னை மாநகராட்சிக் காவல்துறை, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு அச்சிறுமி இப்போது தோற்றமளிக்கக் கூடிய படத்தை உருவாக்கியுள்ளனர். அச்சிறுமி ஓரிரு வயதாக இருந்தபோது எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு இதைத் தயாரித்தனர்.

காவல்துறையினர் விரைவில் அப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதோடு அனைத்து காவல் நிலையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பொது இடங்களில் அதை விநியோகிப்பர்.

“அப்படத்தை அவள் பார்ப்பாள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பல ஜோதிடர்களிடம் சென்றோம். எங்கள் மகள் திரும்ப வருவாள் என அனைவரும் கூறினர்,” என்று தந்தை ஜி.கணேஷ் சொன்னார்.

பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றும் கணேஷ்-வசந்தி தம்பதியருக்கு 2004ல் தனுஷ் என்ற மகனும் 2009ல் கவிதா என்ற மகளும் பிறந்தனர்.

2011 செப்டம்பர் 19ஆம் தேதி, கவிதா காணாமல் போனதை குடும்பத்தார் கண்டறிந்தனர். அக்கம்பக்கம் சுற்றிலும் அவர்கள் தேடியும் கவிதா கண்டுபிடிக்கப்படாததைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.

“நாங்கள் காவல் நிலையத்துக்குத் திரும்பத் திரும்பச் சென்றோம். தங்களால் ஆன அனைத்தையும் செய்வதாக மட்டுமே அதிகாரிகள் எங்களிடம் கூறினர்.

“ஓராண்டுக்குப் பிறகு அப்போதைய நகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை நான் சந்தித்தேன். மத்திய குற்றவியல் தடுப்புப் பிரிவுக்கு வழக்கை அவர் மாற்றிவிட்டார்,” என்று கணேஷ் விவரித்தார்.

வழக்கை விசாரித்த கண்காணிப்பாளர் ரவி, பணியிடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது பலமுறை கைமாறியது. 2015ல் கவிதாவின் பெற்றோர் ஆட்கொணர்வு மனுவைச் சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றனர்.

“சில மாதங்கள் கழித்து, எங்களது அனுமதியின்றி வழக்கறிஞர் எங்கள் மனுவை மீட்டுக்கொண்டார். அதன் பிறகே கோயில்கள், ஜோதிடர்கள் பக்கம் நாங்கள் திரும்பினோம்,” என்றார் கணேஷ்.

2022ல், வழக்கை நிலுவையில் வைப்பதாக கவிதாவின் பெற்றோரிடம் காவல்துறையினர் கூறினர். ஓராண்டு கழித்து, வழக்கை நிறைவு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2023 பிப்ரவரியில், வழக்கை நிறைவுசெய்ய தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கணேஷ் மனுதாக்கல் செய்தார்.

ஆறு மாதங்களுக்குள், மாதர்களுக்கும் சிறார்களுக்கும் எதிரான குற்றவியல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறைக் குழு, இந்த வழக்கைத் தொடர்ந்தது.

அப்புதிய விசாரணைக் குழு, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கவிதா இப்போது தோற்றமளிக்கக் கூடிய படத்தை உருவாக்கியது.

“அச்சிறுமி இப்போது எப்படி இருப்பாள் என்பதைக் காட்டும் படத்தை நாங்கள் உருவாக்கினோம். அந்தப் படத்தில் இருப்பதைப்போலவே அச்சிறுமி இருப்பாள் என்று அவளுடைய பெற்றோரும் நம்புகின்றனர். அவளைக் கண்டுபிடிக்க எங்களால் ஆன அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
மாயம்காணவில்லைசிறுமிசெயற்கை நுண்ணறிவுகாவல்துறை