முன்னாள் மாணவர் நன்கொடை: அண்ணா பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்

முன்னாள் மாணவர் நன்கொடை: அண்ணா பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்

படம்: தினமணி

12 Feb 2026 - 7:54 pm

1 mins read

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் இதற்கான நன்கொடையை வழங்கி உள்ளனர்.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் வைதர்மா என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

உயர் செயல்திறன் கொண்ட கணினிக் கட்டமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 11) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் உள்ள மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்துவது மிக முக்கியம். இதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவைப்பட்ட ரூ.1 கோடியை முன்னாள் மாணவா் சுந்தா் வைத்தியநாதன் அளித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரக் கற்றல் (எம்எல்), ‘ரோபாட்டிக்ஸ்’, தரவு அறிவியல் போன்ற துறைகளில் மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தப் புதிய ஆய்வகம் கைகொடுக்கும் என்றார் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஹரிஹரன்.

தொழில்துறை, கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான பிணைப்பு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் குமரேசன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்