சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பயண நேரத்தைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் திறன்மிகு போக்குவரத்து சமிக்ஞையைப் பயன்படுத்த அம்மாநகரக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
165 முக்கியச் சந்திப்புகளில் அவற்றை நிறுவ அது முடிவுசெய்துள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சமிக்ஞையைப் பொருத்தும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
போக்குவரத்து சமிக்ஞையில் உள்ள பச்சை விளக்கை வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் 120 வினாடிகள் வரை எரியவிடவும் போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களில் 30 வினாடிகள் வரை இயக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் திறன்மிகு போக்குவரத்து சமிக்ஞை பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டது.