சென்னை: சென்னை மாநகரில் விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிகப் பணியாளர்களின் நலனுக்காகச் சென்னை மாநகராட்சி குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகளை அமைத்து வருகிறது.
இணைய நிறுவனங்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் பொருள்களை விநியோகிக்கும் ஊழியர்கள் தங்களது பயணங்களின் இடையே சிறிது நேரம் ஓய்வெடுக்க இத்திட்டம் வழிவகுக்கும்.
ஏற்கெனவே அண்ணா நகரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் புதிய ஓய்வறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 10 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் அமையவுள்ள இந்த கண்டெய்னர் ஓய்வறையில் கழிவறை, குடிநீர், கைப்பேசி மின்னேற்றம் செய்யும் வசதிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இன்னும் 20 நாள்களில் அந்த அறை பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அத்துடன், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பார்வதி நகர், சர்மா நகர் உள்ளிட்ட ஆறு பேருந்து நிறுத்தங்களில் நவீன நிழற்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், அவற்றில் கண்காணிப்புக் கேமராக்களும் அவசர கால அழைப்புப் பொத்தான்களும் பொருத்தப்பட உள்ளதாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவருமான திரு சிவா தெரிவித்தார்.
