புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தபோதிலும், பல்வேறு நிர்வாக நெருக்கடிகள் காரணமாக முன்கூட்டியே பதவி விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த விமான விபத்து, கடுமையான பாதுகாப்புச் சோதனைகள், வருவாய் இழப்பு ஆகிய காரணங்களால் ஏர் இந்தியா கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்தது.
குறிப்பாக, 260 பேரின் உயிரைப் பறித்த விமான விபத்திற்குப் பிறகு, அந்நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
தகுதிச் சான்றிதழ் இன்றி எட்டு முறை விமானத்தை இயக்கியது, அவசரகால பாதுகாப்பு உபகரணங்களைச் சரிபார்க்கத் தவறியது போன்ற அலட்சியங்களுக்காக ஒழுங்குமுறை அமைப்புகள் ஏர் இந்தியாவைச் சாடின.
2024-25 நிதியாண்டில் ஏர் இந்தியாவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களும் இணைந்து ஏறக்குறைய ரூ.9,808 கோடி ($1.36 பில்லியன்) இழப்பைச் சந்தித்தன.
பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களால் ஏர் இந்தியாவின் முக்கிய வழித்தடங்களில் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டது.
புதிய அதிகாரி நியமிக்கப்படும்வரை, அடுத்த ஆறு மாத காலத்திற்கு வில்சன் பணியில் நீடிப்பார் எனத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின்கீழ் செயல்படுகிறது. அதன் தலைவராக என்.சந்திரசேகரன் உள்ளார். இந்த நிறுவனத்தில் டாடா குழுமம் 74.9 விழுக்காடு பங்குகளையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 25.1 விழுக்காடு பங்குகளையும் கொண்டுள்ளன.

