மதுரை: வரும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மதுரை விமான நிலையத்திலிருந்து புதுடெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமானச் சேவைகளை வழங்கவிருக்கிறது.
மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவரும் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் புதன்கிழமை (அக்டோபர் 29) இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பதிவில், “அதிக விமானங்கள் எனில் அதிகத் தெரிவுகள், மேம்பட்ட இணைப்பு, வலுவான போட்டி - அனைத்தும் பயணிகளுக்கும் வணிகத்திற்கும் நல்லது. விற்பனையாகும் ஒவ்வொரு விமானப் பயணச்சீட்டும் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும் வட்டார வளர்ச்சிக்கும் உதவுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீண்டும் மதுரையிலிருந்து சேவை வழங்கவிருப்பதை மதுரை உட்கட்டமைப்பு, மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே. மகேந்திர வர்மன் வரவேற்றுள்ளார்.
மதுரையிலிருந்து பெங்களூரு, சென்னை, டெல்லி போன்ற நகரங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனம் சேவை வழங்கிவரும் நிலையில், அதன் தனி ஆதிக்கத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் மறுவரவு தடுக்கும் என்று டாக்டர் வர்மன் கூறியதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவைகளுக்கான முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மதுரையிலிருந்து நாளொன்றுக்குச் சென்னைக்கு ஒன்பது விமானங்களும், பெங்களூருக்கு மூன்று விமானங்களும், புதுடெல்லிக்கு ஒரு விமானமும் இயக்கப்படுகின்றன.
இண்டிகோ நிறுவனம் மட்டும் மதுரையிலிருந்து விமானங்களை இயக்கி வந்ததால் தீபாவளியின்போது விமானப் பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


