சென்னை - மொரிஷியஸ் இடையே மீண்டும் விமானச் சேவை தொடக்கம்

1 mins read
1b462187-f72e-4054-a0a4-09cc6d860b11
முதற்கட்டமாக, சனிக்கிழமை மட்டும் இவ்விமானச் சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: சென்னை - மொரிஷியஸ் இடையே நாலாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு அனைத்துலக விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. தொற்றுப் பரவல் குறைந்து இயல்புநிலை திரும்பியதை அடுத்து, படிப்படியாக விமானச் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானங்கள் சென்றன.

ஆனால், ஹாங்காங், மொரிஷியஸ் நாடுகளுக்கு மட்டும் விமானச் சேவைகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை – ஹாங்காங் இடையிலான விமானச் சேவைகள் தொடங்கின.

இந்நிலையில், சென்னை - மொரிஷியஸ் இடையிலான விமானச் சேவை மீண்டும் சனிக்கிழமை (ஏப்ரல் 13) தொடங்கியது.

ஏர் மொரிஷியஸ் விமானம் 245 பயணிகளுடன் அதிகாலை 1.50 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் 173 பயணிகளுடன் அவ்விமானம் மொரிஷியஸ் புறப்பட்டுச் சென்றது.

முதற்கட்டமாக, வாரம் ஒருநாள் சனிக்கிழமை மட்டும் அவ்விமானச் சேவை இயக்கப்படும் என்றும் பின்னர் அது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மொரிஷியசில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவர்கள், நான்கு ஆண்டுகளாக விமானச் சேவைகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில், மீண்டும் நேரடியாக சென்னை - மொரிஷியஸ் இடையே விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்