மதுரை: கோவில்பட்டியில் விமானப் பயிற்சி நிலையம் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின் புதூர், தோணுகால் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று விமான ஓடுதளம் அமைத்துள்ளது.
எனினும் கடந்த பல ஆண்டுகளாக விமான ஓடுதளம் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி 10 பயிற்சி விமானங்களை இயக்க முடியும்.
இந்நிலையில், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான ‘டிட்கோ’ கோவில்பட்டியில் விமானப் பயிற்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக சில நிறுவனங்களிடம் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளதையடுத்து பயிற்சி நிலையத்திற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை டிட்கோ மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் தமிழகத்தில் உலகத்தரத்தில் விமானப் பயிற்சி நிலையம் தொடங்கப்படும் என்று டிட்கோ அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது,


