தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி

2 mins read
b11f201d-51bd-4510-bf49-7e32ec6eb185
எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களின் சாகசங்களைப் பார்த்து கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் அக்டோபர் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காமராஜர் சாலையில் இருக்கும் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரில் இந்த விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டு களிக்க தமிழக அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள், இந்திய ராணுவத்தின் தலைவர், இந்திய கடற்படையின் தலைவர், இந்திய விமானப் படையின் தலைவர், உயர் அதிகாரிகள் ஆகியோர் விமான சாகச நிகழ்ச்சியை அமர்ந்து காண சிறப்புக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

மற்ற பார்வையாளர்கள் நின்றபடி சாகச நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்தனர்.

இந்திய நேரப்படி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 2 மணி நேரத்துக்கு இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

விமான சாகச நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, ஆகாஷ் கங்கா வான்குடை வீரர்கள் 2,000 அடி உயரத்திலிருந்து குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

சுகோய்-30 எம்.கே.ஐ., ரஃபேல், மிராஜ் 2,000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது.

போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் எம்.ஐ-17 மற்றும் பிரசாந்த் எல்சிஎச் (இலகு போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்களும் டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன.

பிரெஞ்சு விமான நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ஹெலிகாப்டர்கள் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டபடி வலம் வந்தன.

தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை அடைந்து சாகசங்களைப் புரிந்து கூடியிருந்த மக்களை மகிழ்வித்தன.

சாகச நிகழ்ச்சியைக் காண மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஏறத்தாழ 8,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்