ரஜினி மகள் நகைகள் மீட்பு

ரஜினி மகள் நகைகள் மீட்பு

2 mins read
a44611ad-08a2-4778-97d9-1599e3858d8f
பிப்ரவரி 10ஆம் தேதி இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. படம்: இணையம் -

நடிகர் ரஜினியின் மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடுபோனது தொடர்பாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி, 46, என்பவரையும் கார் ஓட்டுநர் வெங்கடேசன், 44, என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈஸ்வரியின் அண்மைய வங்கிப் பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளைத் திருடியது உறுதி செய்யப்பட்டாதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் வீட்டில் 18 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஈஸ்வரி, சிறிது சிறிதாக நகைகளைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், நூறு சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், வீட்டுப் பத்திரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

நகைகள் மீட்பு

தமது வீட்டுப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திடீரென மாயமாகிவிட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார்.

அவற்றின் மதிப்பு ஏறக்குறைய ரூ.3.6 லட்சம் ரூபாய் என்றும் தமது வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

மாயமான நகைகளில் பட்டை தீட்டப்படாத வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தின நகைகள், ஆரம், வளையல்கள் உள்ளிட்டவை அடங்கும்.

2019ல் தம் தங்கையின் திருமணத்தில் பயன்படுத்திய பிறகு, நகைகளைத் தமது பெட்டகத்தில் வைத்திருந்ததாக ஐஸ்வர்யா கூறினார். பிப்ரவரி 10ஆம் தேதி இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஐஸ்வர்யாவின் தங்கையின் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெட்டகம் மூன்று முறை இடமாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
நகைமாயம்