சென்னை: திரைப்பட நடிகர் அஜித்தின் ரசிகர்கள், ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியல் களத்தில் புது விவாதப் பொருளாக உருவெடுத்து வருகிறது.
உளுந்தூர்பேட்டையில் ஒன்றுகூடிய அஜித் ரசிகர்கள், கட்சிக் கொடியையும் முறைப்படி அறிமுகம் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய ஐந்து லட்சம் ரசிகர்கள் ஒருங்கிணைந்து இக்கட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், அனைவரும் குடும்பப் பணிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.
அதையும் மீறி, தற்போது அவரது ரசிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியுள்ளனர்.
மேலும், கட்சியின் ‘மாநிலப் பொதுச்செயலாளர்’ பதவியை அஜித்துக்காகக் காலியாக வைத்துள்ளதாகவும் அவர் அரசியலுக்கு வந்தால் இக்கட்சி அவருக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கட்சியின் பதிவு எண் வந்தவுடன் அடுத்தகட்ட அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
