தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர் அஜித்குமார் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சகோதரருக்கு அரசுப் பணி

2 mins read
ab83e159-2d05-4d97-ad80-a4bc75c29f05
அஜித் குமார் மரணமடைந்ததை அறிந்த உறவினர்களும் நண்பர்களும் நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர். - படம்: ஊடகம்

சிவகங்கை: காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் பகுதி இளையர் அஜித்குமாரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டாவும் அவரது இளைய சகோதரருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்புவனத்தில் உள்ள அஜித்குமார் வீட்டுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நேரில் சென்று, அஜித்குமாரின் தாயார், சகோதரருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, அவர்கள் இருவரிடமும் அமைச்சரின் கைப்பேசி மூலம் முதல்வர் ஸ்டாலினும் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் இந்த உரையாடல் அவரது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

“திருப்புவனம் இளையருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத்தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்,” என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ‘ஸாரி’ (sorry) என்று ஒற்றை வார்த்தையில் ஆறுதல் கூறுவது எந்த வகையில் நியாயம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை மதுரை 4ஆவது நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதியின் விசாரணைக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அவர் தனது விசாரணையை புதன்கிழமை (ஜூலை 2) காலை தொடங்கினார்.

அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்