மதுரை: தனிப்படை காவலர்களால் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற காவலாளியின் வழக்கு தொடர்பில், வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள காளி கோயிலின் காவலாளி அஜித்குமார் உயிரிழப்புக்குக் காரணமான ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
அஜித்குமார் உயிரிழப்புக்கான மர்மம் தொடர்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், தனது விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், “சிபிஐ விசாரணையில் நீதிமன்றம் உறுதியாக இருந்தாலும் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விசாரணையின் இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு அனைத்து நிவாரணங்களும் வழங்க வேண்டும் என்றும் அதேநேரம், இதே வழக்கில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.
மீண்டும் கல்லூரி பணிக்குத் திரும்பிய பேராசிரியை நிகிதா
இதனிடையே, திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றும் நிகிதா, காவலாளி அஜித்குமார் மரணத்துக்குப் பின்னர் கல்லூரிக்கு வராமல் மருத்துவ விடுப்பில் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மகளிர் கல்லூரிக்கு வந்தவர், வழக்கம்போல் வகுப்பறைக்குச் சென்று மாணவிகளுக்குப் பாடம் கற்பிப்பது, அலுவலகப் பணிகளை மேற்கொள்வது என தனது அன்றாட பணிகளைத் தொடங்கிவிட்டதாகக் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

