சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கையால் டாஸ்மாக், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அரசுத் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்ததுபோல் விசாரணை நடத்துவது ஏன் என்றும் தமிழக அரசு கேள்வி எழுப்பியிருந்தது.
“சட்டவிரோதப் பணப்பரிமாற்ற குற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம். நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனவே, அமலாக்கத்துறை சட்டப்படி தனது விசாரணையைத் தொடரலாம்,” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) சட்டப்பேரவையில் நடைபெற்ற மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியா முழுவதும் மதுவிலக்கு என வரும்போது, தமிழகத்திலும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று செந்தில் பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது மாநிலம் முழுவதும் மதுவிற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்தில் ஏறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அண்மையில் அறிக்கை வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க தமிழக அரசு அஞ்சுகிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனையை தடுத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்துடன் அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வுப் பிரிவு என்ற ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திரு செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.
மது, போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக கடந்த 2024ஆம் ஆண்டு 7,691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7,486 குற்றவாளிகள் கைதானதாக குறிப்பிட்ட அவர், 2025ஆம் ஆண்டில் மட்டும் 952 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,042 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் அருகே இருந்த 103 டாஸ்மாக் கடைகளும், கூடுதலாக 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், டாஸ்மாக் வருமானத்தில்தான் அரசு செயல்படுவதாக ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருவதாகச் சாடினார்.