பொங்கலுக்குப் பின் கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும்: தேமுதிக

2 mins read
661bcbb4-e9f9-4195-9fdc-21c31c402570
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் (தேமுதிக) மகளிர் அணியினருடன் இணைந்து சமத்துவப் பொங்கலிடும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயகாந்த். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்குத் திராவிடக் கழகக் (தேமுதிக) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி மாத இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ​நிகழ்ச்சியில் மகளிர் அணி​யினருடன் பிரேமலதா இணைந்து பொங்​கல் வைத்​தார். தொடர்ந்து உறியடித்​தல், கயிறு இழுத்​தல் போன்ற பாரம்பரிய விளை​யாட்டுப் போட்​டிகள் நடத்​தப்​பட்டு வெற்றி பெற்​றவர்​களுக்குப் பரிசுகள் வழங்​கப்​பட்​டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரேமலதா, அண்மைய கடலூர் மாநாடு வெற்றியுடன் நடத்தப்பட்டமைக்கு தேமுதிக தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், தொண்டர்களின் விருப்பப்படி, தமிழக மக்களின் நலன் காக்கும் மகத்தான வெற்றிக் கூட்டணியைத் தேமுதிக அமைக்கும் என உறுதியளித்தார்.

இப்போதைய அரசியல் சூழலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்துத் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்றார்.

பொங்கலுக்குப் பின் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும், அதன் பின்னரே வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும், பிப்ரவரி மாதம் நான்காம் கட்டப் பயணத்தைத் தொடங்கவுள்ளதாகவும், விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், பிரேம லதா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “இந்தத் தேர்​தலுக்கு பின் அமை​யும் ஆட்சி மக்​களுக்​கும் நாட்​டுக்​கும் நல்​லதை விளைவிக்​கும்,” என்றார்.

கூட்டணி குறித்த செய்தியாளர் கேள்விக்கு, “தேமுதிகவின் கூட்​டணி குறித்து மாவட்டச் செய​லா​ளர்​கள் அவர்​களின் கருத்​துகளைத் தெரி​வித்​துள்​ளனர். நாங்​கள் அவற்றைக் கவனத்​தில் கொண்டு பரிசீலித்து வருகிறோம்.

“திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிகளுமே இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படாமல் உள்ளன. இந்தச் சூழலில், மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை நன்கு பரிசீலித்து நிதானமாகவும் தெளிவாகவும் ஒரு நல்ல முடிவை எடுப்போம். எப்படியும் ஜனவரி இறுதிக்குள் அந்த நல்ல முடிவு குறித்து அறிவிப்போம்,” என்று பிரேமலதா கூறினார்.

குறிப்புச் சொற்கள்