தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: விஜய பிரபாகரன்

1 mins read
71566023-2367-41e1-8722-2b5f648787f7
விஜய பிரபாகரன். - படம்: இணையம்

மதுரை: தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று தேமுதிகவின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

“தமிழகத்தில் 2026ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். திராவிடக் கருத்தியலைக் கொண்ட கட்சிகள்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாடு என்பது திராவிட நாடு. திராவிடக் கொள்கைகள் கொண்ட கட்சிகள்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கான சாத்தியம் உள்ளது,” என்று விஜய பிரபாகரன் கூறினார்.

“விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம். அது அவரது கட்சி. கேப்டன் விஜயகாந்த் வேறு, விஜய் வேறு. தேமுதிகவைச் சங்கடப்படுத்த எந்தக் கட்சியாலும் முடியாது. திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிகவுக்கு எந்தச் சங்கடமும் இல்லை,” என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, “காங்கிரஸ் கட்சி சார்பான விழாவில் பல ஆண்டுகாலமாகத் தொடரும் நட்பின் வெளிப்பாடாக சுதீஷ் கலந்துகொண்டார். அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை,” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தரப்பில் விருப்பம் இருந்தாலும் கூட்டணியில் இடம்பெறுவது பற்றி விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்