புதுக்கோட்டை: தமிழகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4,000ஆக உயர வாய்ப்புள்ளது. இதுதொடர்பான விவரங்கள் எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அரசுத் துறைகள் சார்பில் 721 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஆட்சியர் எம்.அருணா தலைமையில் நடைபெற்றது.
அப்போது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ், “சிவகாசி பட்டாசு ஆலைத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
“இதன் அடிப்படையில், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது,” என்றார்.
தேயிலைத் தோட்ட நல வாரியத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகள் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் வேலை செய்யும் பிற மாநிலத் தொழிலாளர்களின் விவரங்கள் அரசிடம் உள்ளதாகவும் மாவட்டம்தோறும் அதிகாரிகள் அதன் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும் அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் மேலும் தெரிவித்தார்.

