புதிய விமான நிலையத் திட்டத்துக்கு மாற்று இடம்: தமிழக அரசு

புதிய விமான நிலையத் திட்டத்துக்கு மாற்று இடம்: தமிழக அரசு

2 mins read
2b1bebdb-6b4c-40af-a160-f527f6178787
புதிய விமான நிலையத்தை அமைக்க, பரந்தூர் பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். - சித்திரிப்புப் படம்: பூவுலகு
Google News Preferred Icon

சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்றும் புதிய விமான நிலையம் அமைக்க மாற்று இடம் கண்டறியப்படும் என்றும் தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

மேலும், ஆண்டுதோறும் மூன்று சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை அமைக்க, அங்குள்ள விவசாயிகளும் கிராம மக்களும் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

பரந்தூரைச் சுற்றியுள்ள 12 கிராம மக்களின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரமும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் என்றாலும் பரந்தூர் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுகிறது என்றும் அவர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார்.

விமான நிலையத்துக்கு மாற்று இடம் தேர்வு

புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கு விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மாற்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவிலேயே புதிய இடம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்கப்பட்டு, அதன் கையாளும் திறன் ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளாக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’

அனைத்துலக அளவிலான போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயுத் தட்டுப்பாடு, விலை உயர்வை எதிர்கொள்ளும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின்கீழ் ஆண்டிற்கு மூன்று சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டம் எதிர்வரும் பொங்கல் திருநாள் முதல் அமலுக்கு வருகிறது.

மானியத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் இதன்மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்