சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சோமாஸ்கந்தர் வெண்கலச் சிலை உள்ளிட்ட நான்கு சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து விலைமதிப்பற்ற ஏராளமான சிலைகள் பல்வேறு நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன.
அவற்றை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், காவல்துறையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் சிவன், பார்வதி ஆகியோருடன் முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தர் சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மாயமானது.
இதுகுறித்து அம்மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கடத்தல்காரர்களைத் தேடி வந்தனர். எனினும் துப்பு துலக்க முடியவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அரும்பொருளகம் ஒன்றில் முருகன் சிலை அகற்றப்பட்ட நிலையில் சிவன், பார்வதி தேவி வெண்கலச் சிலை இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தச் சிலையை மீண்டும் தமிழகத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதற்கட்டமாக அமெரிக்க அரசிடம் அந்தச் சிலை தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், அந்தச் சிலை தமிழகத்தில் உள்ள கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து சோமாஸ்கந்தர் சிலை மட்டுமல்லாமல் சுந்தரமூர்த்தி நாயனார், பரவை நாச்சியார், சில நடராஜர் சிலைகள் ஆகியவற்றையும் அமெரிக்கா ஒப்படைக்க முன்வந்துள்ளது.
இதர மூன்று சிலைகளும் சோழர், விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை. இம்மூன்று சிலைகளும் கடந்த 1956 முதல் 1959 வரை தமிழக கோவில்களில் இருந்ததை தமிழக ஆராய்ச்சியாளர்கள் புகைப்பட ஆதாரங்கள் மூலம் நிரூபித்துள்ளனர்.


