சென்னை: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை 5 மணிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மாநில முதல்வர்கள் மாநாடு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது.
மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், கேரளத்தின் வி.டி. சதீசன், கர்நாடகத்தின் டி.கே. சிவகுமார், தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 19) இரவு தென்மாநில முதல்வர்களுக்கு அமித் ஷா சிறப்பு விருந்தளிக்கிறார்.
வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மாநாடு நடைபெறவுள்ளது. தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் அமித் ஷா வழிபாடு செய்யவுள்ளார். அதையொட்டி, மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், முக்கியச் சந்திப்புகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநாட்டில் உள்கட்டமைப்பு விரிவாக்கம், தொழில் முதலீடு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்ட அமலாக்க முகமைகளின் ஒருங்கிணைப்பு, எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பேசப்படும்.
குறிப்பாக, தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நீடித்துவரும் காவிரி நீர்ப் பகிர்வு விவகாரம் குறித்து இம்மாநாட்டில் இரு மாநிலங்களும் தங்களது நிலையை எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.
முந்தைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்படும்.


