மொடக்குறிச்சியில் அமித்ஷா பிரசாரம்: தமிழகத்தின் வளர்ச்சி குறித்து உரை

மொடக்குறிச்சியில் அமித்ஷா பிரசாரம்: தமிழகத்தின் வளர்ச்சி குறித்து உரை

2 mins read
3b87fdb8-e930-44a8-8cea-37aba9e924b4
மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகாவுக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி, திறந்த வாகனத்தில் நின்றபடி ‘சாலைக் காட்சி’ மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. - படம்: தினத்தந்தி

ஈரோடு: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம், சிவகிரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து நடைபெற்ற இந்தப் பிரசாரத்தின்போது, சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சின்னமலை சிலை வரை அமித்ஷா திறந்த வாகனத்தில் நின்றபடி ‘சாலைக் காட்சி’ மேற்கொண்டார்.

வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, தமிழகத்தின் அரசியல் சூழல், வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசினார்.

தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பலமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

ஈரோட்டின் முக்கிய வீதிகள் வழியாகத் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுமக்களை நோக்கி கையசைத்து வாக்கு சேகரித்தார்.
ஈரோட்டின் முக்கிய வீதிகள் வழியாகத் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுமக்களை நோக்கி கையசைத்து வாக்கு சேகரித்தார். - படம்: டுவிட்டர்/ அமித்ஷா

தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் வாரிசு அரசியல் கலாசாரம் மாறவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், திமுகவின் தலைமை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்து உள்ளது. தனது மகனை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என விமர்சித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டினால் இந்த மசோதா எதிர்கொண்ட சவால்களைச் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசியத் தலைவர்களின் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவுடன் இணைந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார்.

ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் களம் சூடுபிடித்துள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்