புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க சிபிஐ, ஈடி உள்ளிட்ட மத்திய முகமைகளை அமைச்சர் அமித்ஷா பயன்படுத்தியுள்ளார் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை தமிழ் நாடு மாணவர் காங்கிரஸ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் வருண் சவுத்ரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வருண் சவுத்ரி, “தமிழகத்தில் பிறந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு மாநில அளவிலான மாநாட்டை நடத்த வேண்டும். அதில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நான் அழைத்து வருகிறேன்,” என்றார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் குமார், “திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சுமுகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மத்திய அமைச்சர் அமித்ஷா ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி வருகிறார்.
“மத்திய முகமைகளான ஈடி, சிபிஐ, ஐடி போன்ற துறைகளை வைத்து இக்கூட்டணியை உருவாக்கியுள்ளார். அதற்கு உரிய பதிலை மக்கள் வரும் தேர்தலில் கொடுப்பார்கள்.
“திமுகவுடனான கூட்டணிப் பேச்சு நல்லபடியாக முடியும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அது குறித்து எங்கள் தலைமை பேசி உரிய முடிவை எடுக்கும்,” என்றார்.

