கோவை: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவைக்கு வருவதையொட்டி கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளுக்காக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்குகிறார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
புதன்கிழமை (பிப்ரவரி 26) காலை கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டள்ள பாஜக மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
அங்கிருந்தவாறே ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களையும் அவர் காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கோவை உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் 1,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
அந்த நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை மாலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்துகொள்கிறார். அதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார்.

