அமமுகவின் 11 வேட்பாளர்கள் அறிவிப்பு

அமமுகவின் 11 வேட்பாளர்கள் அறிவிப்பு

2 mins read
21ca4d7f-58ec-4194-be0d-25730e48902a
டிடிவி தினகரன் - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 11 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) வெளியாகியிருக்கின்றன.

11 தொகுதிகளில், பூவிருந்தமல்லி - ஏழுமலை, மன்னார்குடி - எஸ் காமராஜ் , சைதாப்பேட்டை - செந்தமிழன், மடத்துக்குளம் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, காரைக்குடி - தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் - ஞானசேகரன், திருச்சி மேற்கு - தொட்டியம் ராஜேசேகரன், ஒட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன், பெரியகுளம் - கதிர்காமு, நாங்குநேரி - இசக்கிமுத்து, திருவையாறு - வேலுகார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் மடத்துக்குளம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சி. சண்முகவேலு, முன்னாள் எம்எல்ஏ ஆவார். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, கிராமப்புற தொழில்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு, அமைச்சரவை மறுசீரமைப்பின்போது வெறும் ஐந்து மாத காலத்தில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டவர் அவர். கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் முன்னர் அறிவித்தபடியே இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பிடித்தார் தினகரன்.

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக-பாஜக இணைந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அவற்றில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்