திருவள்ளூர்: இறால் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், ஏழு பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) காலை நிகழ்ந்தது.
அந்தத் தனியார் ஆலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை, ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டபோது தொழிற்சாலையில் பலர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
வாயு கசிந்த காற்றைச் சுவாசித்த ஊழியர்களுக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும் சிலருக்கு வாய், மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
‘ஆம்புலன்ஸ்’ வாகனங்கள் வருவதற்குள், மூச்சுத் திணறல் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர். மயக்க நிலையில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

