தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட ‘அம்ரித் பாரத்’ ரயில்கள்

தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட ‘அம்ரித் பாரத்’ ரயில்கள்

1 mins read
15e06d7b-e367-4605-ae80-bf7379783aef
‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு இணையான வேகம், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் புதிய ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: தி சௌத் இந்தியா டைம்ஸ்
Google News Preferred Icon

சென்னை: ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) இரண்டு ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு இணையான வேகம், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் புதிய ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரயிலின் முன்புறம், பின்புறம் என இருபுறங்களிலும் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இவை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய திறன்கொண்டவை.

இந்த ரயில்களில் 12 முன்பதிவுப் பெட்டிகள் உட்பட, மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 1,834 பயணிகள் வசதியாகப் பயணம் செய்ய முடியும்.

குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண, முன்பதிவுப் பெட்டிகளைக் கொண்டுள்ளதால், எளிய, நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் விரைவாகப் பயணம் மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது நாடு முழுவதும் 30 முக்கியமான வழித்தடங்களில் 60 ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்படும் நிலையில், தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய ரயில்களையும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கோவை வழித்தடங்களில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்