தமிழ்நாட்டுக்கு நீதிமன்றம் நல்ல முடிவை அறிவிக்கும்: அன்பில் மகேஸ் நம்பிக்கை

2 mins read
57cd8e7c-bc1e-41a0-9ff0-e1a57e99c752
அன்பில் மகேஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்ட துறை சார்ந்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை அரசுப் பள்ளிகளில் 1.85 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

“மாணவர்கள் சிலர் ஜெர்மனிக்கு சென்று வந்துள்ளனர். வெளி நாடுகளில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள், கற்றல் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்பது இப்பயணத்தின் நோக்கம்.

“இதன் மூலம் மொழி தவிர அறிவும் முக்கியம் என்பதை மாணவர்கள் உணர்ந்துள்ளனர்,” என்றார் திரு அன்பில் மகேஸ்.

மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முழுவதும் இக்குழுவினர் நேரில் சென்று மாணவர்களையும் கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் முடிவில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

“தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் மத்திய அரசு பெரியண்ணன் போல நடந்துகொள்கிறது. அதில் தெரிவிக்கப்பட்ட பல அம்சங்கள் தமிழகத்துக்கு தேவையில்லை என்பது எங்கள் முடிவு.

“மத்திய அரசு நிதி வழங்காமல் போனதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

“நிதி தேவை என்பதால், அதை வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். மாணவியர்க்கு வழங்கப்படும் நிதி இதனால் தடைபடுகிறது. ஒன்றிய அரசு அவர்களின் கொள்கையை திணிக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கின்றது.

“கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இது தொடர்பாக நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதிமன்றத்தின் மூலம் இது சாத்தியம் ஆகும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு,” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

குறிப்புச் சொற்கள்