அன்புமணி: அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதால் தீய விளைவுகள் ஏற்படும்

2 mins read
59037282-0620-448a-87d3-b5fd6b0aeb07
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாகத் தமிழ் நாட்டில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமாரி மாவட்டத்தின் கிள்ளியூரில் 1,144 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தென் மாவட்டங்களில் அணு உலைகளால் தமிழக மக்களுக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு அருகில் அணுக்கனிமச் சுரங்கங்களை அமைக்க மத்திய அரசு துடித்து வருகிறது. அதற்குத் தமிழ் நாடு அரசும் அனுமதி கொடுப்பதன் மூலம் உடன்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூர் பகுதியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

கிள்ளியூரைச் சுற்றிலும் 1,144 ஏக்கர் பரப்பளவில் இந்தச் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. அதற்குத் தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துவிட்டால் சுரங்கங்களை அமைக்கும் பணிகள் தொடங்கி விடும்.

மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மக்களுக்கு அணுக்கதிர்வீச்சு தொடர்பான தீயவிளைவுகளும் ஏற்படும். அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாதது என்று அன்புமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்