அன்புமணி: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தரும் கடமை இந்தியாவுக்கு உள்ளது

அன்புமணி: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தரும் கடமை இந்தியாவுக்கு உள்ளது

2 mins read
a9f83b10-2fcf-47c6-9024-6951105a9dd7
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்

சென்னை: இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர இந்தியா, ஐக்கிய நாடுகள் அவையில் குரல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நீதி வழங்காவிடில் இலங்கையுடனான உறவை முறித்துக் கொள்வதாக இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையிலான போரில் பாலஸ்தீனத்தில் 35,000க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்குக் காரணமான இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு நீதி வழங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இதேபோன்ற நீதி பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இன்னும் கிடைக்காதது ஏன் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது, போருக்குப் பிறகு தமிழர்கள் கொடுமைப்படுத்தப் பட்டது போன்ற போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இலங்கைக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

“போர்க்குற்றவாளிகள் 15 ஆண்டுகளாக சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களும் ஒடுக்குமுறைகளும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.

“போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கும் கடமையை இலங்கை சரியாகச் செய்யவில்லை என்பதை ஐநா மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால், இலங்கை செய்யத் தவறியதை உலக நாடுகள் தான் செய்ய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

“எனவே, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் கடமை உலக நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தியாவுக்கு உள்ளது. இலங்கை சிக்கலில், இந்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ள நிலைப்பாடு மாறினால் இலங்கைத் தமிழருக்கு இனியாவது நீதி கிடைக்கும்.

“எனவே, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இப்போதும் தொடர்வது ஆகியவற்றுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்