விழுப்புரம்: பாமகவில் உட்கட்சிப் பூசல் பெரிதாகி வரும் நிலையில், திடீர் திருப்பமாக, ஜூன் 5ஆம் தேதி அக்கட்சியின் நிறுவனர் ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
பாமக இளையரணித் தலைவராக தனது பேரன் முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தது முதல் அக்கட்சியில் மோதல் ஏற்பட்டு, இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் பலரை ராமதாஸ் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார். இதற்குப் பதிலடியாக, நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கியுள்ளார் அன்புமணி.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த அதிகார மோதல் பாமகவினரைக் கலக்கமடைய வைத்துள்ளது.
இந்நிலையில், சென்னை முன்னாள் துணை மேயர் சைதை துரைசாமி, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகிய இருவரையும் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் பார்க்க முடிந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இருவரும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஜூன் 5ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை அன்புமணி ராமதாஸ், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாசைச் சந்தித்தார். ஏறக்குறைய 45 நிமிடங்கள் இச்சந்திப்பு நீடித்தது என்றும் அன்புமணி தமது மூன்றாவது மகளுடன் வந்திருந்தார் என்றும் பாமக வட்டாரங்கள் கூறின.
தொடர்புடைய செய்திகள்
சந்திப்பு முடிந்த கையோடு, அங்கிருந்து புறப்பட்ட அன்புமணி, செய்தியாளர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.
அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவை தொடர்ந்து இணைந்திருக்கச் செய்ய சிலர் முயற்சி மேற்கொண்டனர்.
அதன் பொருட்டே பாஜக ஆதரவாளரான ‘துக்ளக்’ குருமூர்த்தி ராமதாசைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாமக நிர்வாகிகள் பலரும், கட்சியில் எந்த பொறுப்பில் இருக்கிறோம் என்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.
ராமதாஸ், அன்புமணி சந்திப்புக்குப் பிறகு இந்தக் குழப்பம் முடிவுக்கு வரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.