தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்தான் பாமக தலைவர்: அன்புமணி திட்டவட்டம்

2 mins read
e417f1b6-46c6-4b3e-abe4-a843804af83f
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சிப் பூசல் மேலும் பெரிதாகி வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட புதிய அறிவிப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பாமக தலைவராக தாம் தொடர்ந்து செயல்பட இருப்பதாகவும் தாம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“பாமக தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளையர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது.

“ஊமை சனங்களுக்கு சமூகநீதியும் அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989ஆம் ஆண்டு பாமக தொடங்கப்பட்டது,” என அன்புமணி கூறியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாசின் வாழ்த்துகளுடனும் கட்சித் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளதாகவும் அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே, கட்சியின் தலைவராக தாம் தொடர்ந்து செயல்படப் போவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமை. உங்களை சந்திக்க விரைவில் தேடி வருவேன்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாமக நிர்வாகிகளாக சிலரை நியமித்தார் அக்கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் ராமதாஸ். இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருவருக்கும் இடையே மோதல் மூண்டது.

இந்நிலையில், அன்புமணி பாமக செயல் தலைவராக மட்டுமே பொறுப்பில் நீடிப்பார் என்றும் பாமக தலைவராக தாம் பொறுப்பு வகிப்பதாகவும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்