சென்னை: பாமக நிறுவனத் தலைவர் ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரில் சந்தித்துக்கொண்டனர்.
ராமதாசின் திருமணநாளையொட்டி இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. உட்கட்சிப் பூசலால் பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிளவு ஏற்பட்டது. ராமதாசும் அன்புமணியும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாகச் செயல்பட்டனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அன்புமணியின் கை ஓங்கியதையடுத்து கட்சி அவரது கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. தேர்தலின்போது வெவ்வேறு அணிகளில் இடம்பெற்ற ராமதாசும் அன்புமணியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், பாமக செயல்தலைவராக தனது மூத்த மகள் சீகாந்தியை நியமித்தார் ராமதாஸ்.
சட்டமன்றத் தேர்தலில் ராமதாசின் கடும் விமர்சனத்தையும் மீறி, சௌமியா அன்புமணி உட்பட நான்கு பேர் வெற்றி பெற்றதால் தேர்தலுக்குப் பிறகு அன்புமணியின் செல்வாக்கு பாமக வட்டாரங்களில் அதிகமானது. இதையடுத்து இருதரப்பினரும் நெருக்கமான சூழல், சமரச முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ராமதாஸ்-சரஸ்வதி தம்பதியினரின் 61வது திருமணநாளையொட்டி ஆசி பெறுவதற்காக ராமதாசை அவரது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் சந்தித்தார் அன்புமணி. அவரது மனைவி, இரு மகள்கள், இரு மகன்கள், பேரப் பிள்ளைகளும் உடன் வந்திருந்தனர்.
அன்புமணியைக் கண்டதும் கண்ணீர் சிந்திய ராமதாஸ் அவரைக் கட்டித்தழுவினார். அன்புமணியும் கண் கலங்கினார்.
பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாக வெளியான தகவலையடுத்து, குடும்பச் சண்டை முடிவுக்கு வந்திருப்பதாக பாமகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.
தன் தந்தையைச் சந்தித்து வாழ்த்தும் ஆசிர்வாதமும் பெற்றதாகவும் இனி நல்லதே நடக்கும் என்று அன்புமணி தெரிவித்திருப்பதும் அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

