என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்தக்கூடாது: ராமதாஸ்

1 mins read
4a2b8fba-e45e-44ca-a48f-0c3da158acee
அன்புமணி, ராமதாஸ். - படம்: மாலை மலர்

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியில்(பாமக) ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால், தமிழகத் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணிதான் பாமக தலைவர் எனக் கூறியுள்ளது. அதன் காரணமாக, தமிழகத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து ராமதாஸ் தரப்பினர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லிக் காட்ட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய்மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளது.

“கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. எங்களுக்கு கட்சி இல்லை என்று சொல்ல எனக்கு ஒரு பிள்ளை உள்ளார். தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும்.

“இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்தக்கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று ராமதாஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்