தமிழகத்தில் புகைக்கும் வயதை 21 ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்து

2 mins read
ea8d2bad-cd81-4085-803b-f4f94a787857
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாகக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கர்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைபிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதையும் 18ல் இருந்து மூன்று ஆண்டுகள் உயர்த்தி 21ஆக அதிகரித்துள்ளது.

“புகையிலைப் பயன்பாடு தொடர்பான குற்றங்களுக்கு அங்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

“இந்தத் திருத்தங்களுக்கு அதிபர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடகத்தில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதுடன் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

“அதேநேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக் கொள்ளும் தமிழகம், பல நூறு முறை வலியுறுத்தியும்கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

“இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21ஆக உயர்த்த வேண்டும். அதன்பின் ஆண்டுக்கு ஒரு வயது உயர்த்த வேண்டும் என்பதுதான் எனது கனவு.

“அவ்வாறு செய்வதன்மூலம், இப்போது 18 வயதிற்கும் கீழுள்ள இளையர்கள் எவரும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் சிகரெட் பிடிக்க முடியாத நிலை உருவாகும். இதனைப் பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வருகின்றேன். எனினும், தமிழக அரசும் மத்திய அரசும் எனது கருத்துக்குச் செவிசாய்க்க மறுக்கின்றன,” என்று அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்