சென்னை: வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் மையங்களில் பண மோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த சிடாடாலா சுனில், 27, என்பவரைச் சென்னை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த பார்வையற்றவரான பாண்டியன், 61, சென்னை பல்கலைக்கழக ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது, அவருக்கு உதவுவது போல் நடித்த சுனில், அவரது ஏடிஎம் அட்டையையும் ரகசிய மறை எண்ணையும் பெற்றுக்கொண்டார்.
பின்னர், பண அட்டையில் பணம் இல்லை என்று கூறி தான் வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் அட்டையைக் கொடுத்து பாண்டியனை ஏமாற்றினார்.
சிறிது நேரத்தில் தனது கணக்கிலிருந்து ரூ.23,500 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சியடைந்தார்.
அண்ணா சதுக்கம் காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சுனிலைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 79 ஏடிஎம் அட்டைகளும் ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டன.
பெட்ரோல் போடும் ஊழியராகப் பணியாற்றிய சுனில், பல மாநிலங்களிலும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அறிமுகமில்லாதவர்களிடம் ஏடிஎம் அட்டைகளைக் கொடுத்து ஏமாறவேண்டாம் என காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

