தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 43 விழுக்காடு குழந்தைகளுக்கு ரத்தசோகை

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 43 விழுக்காடு குழந்தைகளுக்கு ரத்தசோகை

கோப்புப் படம்: தினமணி

26 Nov 2026 - 4:44 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளில் 43.3 விழுக்காட்டினருக்கு ரத்தசோகை பாதிப்பு இருப்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தேசிய சராசரியைவிட 2 விழுக்காடு அதிகமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் (ஐசிஎம்ஆர்) தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் முன்னெடுத்த ‘சம்பதா’ நுண் ஊட்டச்சத்து ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் 35 மாநிலங்களில் உள்ள 183 மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒருபுறம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் ரத்தசோகை விகிதம் சற்று உயர்வாக இருந்தாலும், மறுபுறம் பள்ளிச் சிறார்கள், வளரிளம் பருவத்தினரிடம் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது.

குறிப்பாக, ஐந்து முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறார்களில் 22.2 விழுக்காட்டினருக்கு மட்டுமே ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு, இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டங்கள் இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் ரத்தசோகை விகிதம் 52.8 விழுக்காடாக உள்ளது. இது தேசிய அளவிலான 55.9 விழுக்காட்டைவிடக் குறைவு.

பிரசவித்த தாய்மார்களுக்கு மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் இரும்புச்சத்து டானிக், பேரீச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனுடன், நியாயவிலைக் கடைகள் மூலம் இரும்புச்சத்து, அயோடின் கலந்த இரட்டைச் செறிவூட்டப்பட்ட உப்புப் பொட்டலங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்