சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன், குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மொத்தம் 11 பிரிவுகளின்கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், அங்கு படிக்கும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த ஞானசேகரன் இருவரையும் மிரட்டி, அந்த இடத்திலேயே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
37 வயதான ஞானசேகரன் மீது வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து எனப் பல வழக்குகள் உள்ளன. இதனால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை உயர் நீதிமன்ற மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நூறு பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கலானது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஞானசேகரன் குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், 11 பிரிவுகளின்கீழ் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, ஜூன் 2ஆம் தேதி ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிக்கப்படும் என்றும் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தண்டனையைக் குறைக்க வேண்டும் என ஞானசேகரன் கேட்டுக்கொண்ட நிலையில், அரசுத் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ஜெயந்தி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஞானசேகரன் மீது பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்கப் புகைப்படம் எடுத்து வெளியிட்டது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 12 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தற்போது அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட போதிலும், திமுகவைச் சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளி ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தமிழக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
மாணவி பாலியல் கொடுமை செய்த நாளன்று ஞானசேகரன் வேறு ஒருவரிடம் கைப்பேசியில் பேசியதாகவும் எதிர்முனையில் இருந்தவரை சார் என அழைத்ததாகவும் அம்மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த முக்கியக் குற்றவாளி யார் என்பது இதுவரை தெரியவில்லை என்றும் அவரையும் கைது செய்த பிறகே இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும் என்றும் சில தரப்பினர் கூறியுள்ளனர்.

