அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு: மே 28ல் தீர்ப்பு

1 mins read
cd7e5757-5244-4e44-9345-40caa702f5e0
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன். - கோப்புப்படம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

அவ்வழக்கு தொடர்பில் சென்னை கோட்டுர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்ற பிரியாணி கடைக்காரர் கைதுசெய்யப்பட்டார்.

அவரை விசாரித்தபோது, திருட்டு உள்ளிட்ட வேறு பல சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. அவற்றின் தொடர்பிலும் அவர்மீது வழக்கு பதியப்பட்டது.

மேலும், சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சேர்ந்த முரளிதரன் என்ற ஞானசேகரனின் இரு கூட்டாளிகளையும் கைதுசெய்தது.

இதனிடையே, ஞானசேகரன் தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இன்னோர் இளம்பெண்ணும் சிபிசிஐடி காவல்துறையிடம் புகாரளித்தார். அதன் அடிப்படையில் விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள், அப்பெண் கூறியது உண்மைதான் எனக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, ஞானசேகரன்மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

அவர்மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

அவற்றில் ஐந்து வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அவ்வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சோ்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

இந்நிலையில், அவ்வழக்கின் தீர்ப்பு 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்