மதுரை: வீ த லீடர்ஸ் அமைப்பு விரைவில் முழுமையான அரசியல் இயக்கமாக மாறும் என்று அதன் நிறுவனர் அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் அமைப்பில் குறுகிய காலத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். அமைப்பின் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் எந்தக் கட்சியிலும் இல்லாத ஒன்றரை கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைச் சென்றடைவதே இலக்கு என்று,” மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) தனியார் மண்டபத்தில் வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய அவர் கூறினார்.
தாங்கள் ஆட்சிக்கு வரும்போது இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், கோயில் குடமுழுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பெரியாரின் சாதி ஒழிப்பு, பெண் விடுதலையை ஏற்பதாகவும், அவரது கடவுள் மறுப்பையும் பிராமண எதிர்ப்பையும் தாம் ஏற்பதில்லை என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் லண்டனுக்கே போயிருக்க வேண்டாம். லண்டனில் எதுவும் இல்லை. இந்திய நிறுவனங்கள்தான் இங்கிலாந்தில் முதலீடு செய்கின்றன. முதல்வர் இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்களை அணுக வேண்டும். இங்கு இருக்கக்கூடிய தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசினார் அண்ணாமலை.
அரசியல் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்ற அவர், 234 தொகுதிகளிலும் தொண்டர்கள் பக்குவப்பட்டு, புதிய தலைவர்கள் உருவாகி வருவதால் நினைத்ததைவிட மிக விரைவாகத் தங்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று உறுதியளித்தார்.
