சென்னை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை போட்டியிட மாட்டார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாறாக, கட்சித் தலைமை அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆயினும், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்குவது குறித்து பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டைத் தாண்டி, அண்ணாமலைக்குப் பெரிய பொறுப்பு வழங்குவது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் கோடிகாட்டியிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
அப்போது, அண்ணாமலையின் தலைமைத்துவத்தை அமித்ஷா பாராட்டிப் பேசினார்.
“தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை மெச்சத்தக்க வகையில் பணியாற்றியுள்ளார். கட்சி அவரது நிர்வாகத் திறன்களை தேசிய அளவில் பயன்படுத்திக்கொள்ளும்,” என்று அப்போது ‘எக்ஸ்’ ஊடகம் வாயிலாக அமித்ஷா குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கவும் அண்ணாமலை மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
விரைவில் அண்ணாமலை குறித்து பாஜக தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, அதற்கு அடுத்த ஆண்டிலேயே அக்கட்சியின் மாநிலத் தலைவரானார்.
சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளரிடம் தோற்றார்.