வீரமுழக்கத்துடன் சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

1 mins read
ce7ff842-5379-4732-ae3a-b80a035f6787
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. - படம்: ஊடகம்

சென்னை: சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்துப் போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்குச் சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார்.

கோவையில் தனது வீட்டின் முன்பு அண்ணாமலை பச்சை நிற வேஷ்டி அணிந்துகொண்டு சாட்டையால் ஆறு முறை சரமாரியாக அடித்துக்கொண்டார். வலியின் வேதனை முகத்தில் தெரிந்த போதும் அதனைப் பொருட்படுத்தாமல் சாட்டையைச் சுழற்றி சுழற்றி அடித்தார். இதனை அருகிலிருந்து பார்த்த பாஜக தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். அங்குக் கூடியிருந்த சில பாஜக தொண்டர்கள் வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டனர்.

சாட்டையடிக்குப் பிறகு அண்ணாமலை மயக்கம்போட்டு விழுந்துவிடாமல் இருக்க அவரது தொண்டர்கள் அவரை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டனர். 

குறிப்புச் சொற்கள்