உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலையின் அமைப்பு

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலையின் அமைப்பு

படம்: மாலை மலர்

14 Oct 2026 - 4:42 pm

1 mins read

மன்னார்குடி: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும் என்று அதன் நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் 15,000 மரக்கன்றுகள் நடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கினால் மட்டுமே நேர்மையான அரசியலை முன்னெடுக்க முடியும் என்றார்.

தற்போதைய அரசியல் சூழல் குறித்து விமர்சித்த அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு கொள்கைப்பிடிப்பின்றிச் செயல்படுவதாகச் சாடினார். இதுபோன்ற சுயநலமிக்க, மோசமான அரசியல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

கிராமங்கள், நகரங்களில் உள்ள ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்துவது, மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது போன்ற அடிப்படைச் சமூகப் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே தனது அமைப்பின் முதன்மை நோக்கம் என்றார் திரு அண்ணாமலை.

“தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் களப்பணியாற்றும் நேர்மையான புதிய தலைவர்களை உருவாக்கி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பாக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள்.

“மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு மாற்றாக நமது அமைப்பு இயங்கும்,” என்றார் அண்ணாமலை.

குறிப்புச் சொற்கள்
உள்ளாட்சித் தேர்தல்அண்ணாமலைசட்டமன்ற உறுப்பினர்