கோவை: அன்னபூர்ணா உணவக அதிபர் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரும் காணொளிப்பதிவு சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், இது தொடர்பாக கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதி பாஜக மண்டலத் தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக பாஜக கூறியுள்ளது.
சதீஷ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளிக் கசிவுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவையில் கடந்த 11ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உணவக அதிபர் சீனிவாசன் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஜிஎஸ்டி குறித்து அவர் சரமாரியாக கேள்வி எழுப்பிய காட்சிகளுடன் கூடிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியானது.
மத்திய அமைச்சரின் காணொளி இவ்வாறு வெளியிடப்பட்டதற்கு ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சம்பந்தப்பட்ட இருவரிடமும் மன்னிப்பு கோரினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கோவை மாவட்ட பாஜக நிர்வாகி சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.