தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரபாகரனிசத்தைச் சிதைக்கிறார் சீமான்: நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்

1 mins read
6aa5c5d6-e579-4975-8431-b30a9e8841a8
சீமானுடன் (இடது) தமிழரசன். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவத்தைக் கைவிட்டு, சீமான் தன்னுடைய கொள்கைகளை முன்னிறுத்துவதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழரசன், “கடந்த 33 ஆண்டுகாலமாகத் தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தில் இருந்து வருகிறேன். நாம் தமிழர் கட்சி தொடங்கிய நாள்களிலிருந்தும் 15 ஆண்டுகளாகக் கட்சிக்கான களப்பணி ஆற்றி வந்துள்ளதை எண்ணி மகிழ்கிறேன்.

“ஆயினும், அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சும் செயலும் தமிழ்த் தேசியக் கருத்துகளுக்கு முரணாக இருந்து வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு எடுத்துக்காட்டாக, பாரதிய ஜனதா கட்சி மனித குலத்தின் எதிரி எனக் கூறிவந்த சீமான், தற்போது அக்கட்சியின் தலைவர்களைப் புகழ்ந்து பேசுவது தொடர்கதையாகி வருகிறது என்று தமிழரசன் குறிப்பிட்டுள்ளார்.

பிழையான தத்துவத்தை நோக்கிப் பயணப்படும் சீமான், தமது கட்சித் தொண்டர்களை பாஜகவிடம் விற்றுவிடுவார்போல் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சாதிப் பெருமை பேசுவோரைக் கண்டிக்காமல் சாதிவெறியை சீமான் தூண்டுவதாகவும் தமிழரசன் சாடியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவங்களையும் கட்சியின் கொள்கைகளையும் கட்சியினர் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, தற்போது தான் சொல்வதே கொள்கை, தான் பேசுவதே தத்துவம் என்றும் பிரபாகரனிசத்தைச் சிதைத்து, சீமானிசத்தை விதைத்து கட்சியை அழிவுப்பாதைக்குக் கொண்டுசெல்கிறார் சீமான் என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்