சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை (செப்டம்டர் 5) காலை முதல் இச்சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
இதேபோலத் திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது. நான்கு வாகனங்களில் வந்த காவலர்கள் இச்சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தகவலறிந்த கே.என். நேரு, தில்லை நகர் இல்லத்திற்கு உடனடியாக வந்து சேர்ந்தார். கட்சி நிதி கேட்டு மிரட்டி வசூல் செய்ததாக வந்த புகாரின் பேரில் இச்சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 800 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகவும் வழக்கு உள்ளது.
குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடர்பாகவும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், எந்த வழக்கின் தொடர்பில் இச்சோதனை நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் வீடுகளில் நடக்கும் இச்சோதனை தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
அரசியல் காரணங்களுக்காகவே சோதனை: மு.க.ஸ்டாலின்
சோதனை நடப்பது குறித்து கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில், அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் தவெக அரசு மேற்கொண்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ஆட்சி அமைப்பதற்காக மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பதவி விலக வைத்து, சட்டப்பேரவை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்,” என்றும் அவர் சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ள இந்த ‘ரீல்ஸ்’ அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் கே.என்.நேருவும் திமுகவும் அஞ்ச மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.


